என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவாரூர் தியாகராஜர் கோயில்"
திருவாரூர்:
“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களுல் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாக ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க தேரோட்டத்தினை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கொடி அசைக்கப் பட்டவுடன் பக்தர்கள் ஆருரா! தியாகேசா!! என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர்.
தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் கடந்த 20-ந்தேதி புறப்பட்டு அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறினார். அதுமுதல் தேரிலிருந்தே பக்தர்களுக்கு தியாகராஜர் காட்சி அளித்தார். முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களும் பக்தர்களால் இழுக்கப்பட்டது. 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது.
அழகிய வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. 96 அடி உயரத்தில் கம்பீரமாய் அசைந்தாடி வந்த தேரினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தர்கள் தருமபுரம் ஆதீனம், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாடுவடுதுறை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மயில் வாகணன், அற நிலையத்துறை அதிகாரிகள் இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன், தக்கார் பாலசுப்ரமணியன், அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள். சின்னராஜ், தொழில திபர்கள் எஸ்.வி.டி.ராஜ், வி.ஆர்.என். பன்னீர் செல்வம், பிரபாகரன், கல்வி அறங்காவலர்கள் காலைக்கதிரவன், சந்திரா முருகப்பன், ராஜேந்திரன், பேரளம் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டம் காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் குவிந்ததால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட உள்ளதால் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாராஜர் தேரானது மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. இத்தேர் பீடம் உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மீது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகளால் 60 அடி உயரத்திற்கு கோபுரம் எழுப்பப்பட்டு 96 அடி உயர தேராக காட்சி அளிக்கிறது. தேர் கோபுரத்தினை சுற்றி சுமார் 5 டன் எடையுள்ள வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 450 டன் என கூறப்படுகிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கிமீ தூரமாகும்
திருவாரூர் தியாகராஜர் கோயில் வேலி நிலப்பரப்பிலும் கோயில் கமலாலய குளம் 5 வேலி பரப்பிலும், கோயில் பூஜைக்குரிய செங்கழுநீர் பூ வளர்க்கப்படும் செங்கழுநீர் ஓடை 5 வேலி பரப்பிலும் அமைக்கப்பட்டது. இதில் செங்கழுநீர் ஓடை மட்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு பரப்பளவில் மிகவும் சிறியதாகிவிட்டது. 5 வேலி பரப்பில் பரந்துவிரிந்துள்ள கோயில் வளாகத்தில் தேர் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து கடைகள் அமைப்பர். பல அரிய பொருட்கள் இந்த கடைகளில் விற்கப்படுவதால் தேரோட்டம் காணவரும் பக்தர்கள் தவிர்க்காமல் இந்த கடைகளுக்கும் வந்து பொருள்களை வாங்கி செல்வர், மதுரை கோயில் தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஆண்டு இக்கோயிலில் கடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்திற்கே பெரிய கோயிலாக விளங்குவதாலும் சைவ சமய மரபில் பெரிய கோயில் எனப்படுவதாலும் இக்கோயில் தேரோட்டத்தினை காண தமிழகம் முழுவதும் இருந்து சிவனடியார்கள் வருவது வழக்கம். இந்தவகையில் இந்த ஆண்டு தேரோட்டத்திற்கும் ஏராளான சிவனடியார்கள் வந்திருந்தனர். அவர்கள் தியாகராஜரை தரிசித்துவிட்டு தேருக்கு முன்பகுதியில் உடுக்கு மற்றும் மேளம் இசைத்து ஆடிப்பாடி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்